Archive for April, 2013

சோணையன் பாமாலை (Sonaiyan Pamalai)

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

ஓமக்காட்டிலே ஒய்யாரமாய் இருக்கும்
ஒப்பற்ற சோணையா வா !
யாவர்க்கும் துணையாகி அனைவர்க்கும் அருள்கின்ற
  அன்பான தெய்வமே வா !
சாமத்தில் நினைத்து உனை சோணையா என்றதும்
  ஆபத்தில் காக்க நீ வா !
ஆரத்தி தீபங்கள் அருமையாய் சாம்பிரானி
  வாசத்தில் வரும் ஐயா வா !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

உயிருக்கு உயிரான உனை நாங்கள் கொண்டாட
உடனிருந்து காக்க வேண்டும் !
நாவிற்கு இனியதாய் நின் நாமத்தை சொல்லவே
நலங்களை நல்க வேண்டும் !
மேனிக்கு மருந்தாகி மேலான நலம் தந்து
மேண்மையாய் வாழ வேண்டும் !
காணிக்கை செலுத்தியுனை போற்றுவோர் தமக்கென்றும்
குறையாத செல்வம் வேண்டும் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

கயவர்கள் கபடர்கள் கொள்ளையர் பயமின்றி
காக்கவே கத்தி கொண்டாய் !
அனைவர்க்கும் நலம் தர நிலையான வடிவிலே
சுக்குமாந்தடியும் கொண்டாய் !
அழகான முகம் அது பயமாக தோன்றவே
ஆங்கார மீசை கொண்டாய் !
கலையாது கொண்டையைக் கட்டியே வைத்து நீ
காக்கின்ற தோற்றம் கொண்டாய் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

ஆறு ஊர் பங்காளி கூடியே படைக்கின்ற
அறுசுவையை ஏற்க வா வா!
ஆணிக் குறட்டிலே ஏறி நீ சொல்கின்ற
அருள்வாக்கு பலிக்க வா வா !
அள்ளியே பூசிய விபூதி முகத்துடன்
அனைவர்க்கும் அருள வா வா !
கையிலே பிடித்த நல்கத்தியும் வேலுடன்
காட்சிதர வா வா !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

எந்நாளும் உனையே எங்களது தெய்வமாய்
கண்ணாகப் போற்றுகின்றோம் !
முன்னாலே தோன்றியே முதல் ஆளாய் வந்து நாள்
முழுவதும் காக்க வேண்டும் !
அண்ணே என்றுனை அன்புடன் அழைத்ததும்
அடுத்து நீ நிற்க வேண்டும் !
பொன்னையும் பொருளையும் நல்லதோர் வாழ்வையும்
நாளெல்லாம் நல்க வேண்டும் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

பொழுதெல்லாம் கருத்துடன் பலமுறை தேடியும்
போனபொருள் கிடைக்கவில்லை !
பொன்னான சொணையா காணிக்கை முடிந்ததும்
கண்முண்ணே கிடைக்கச் செய்தாய் !
காரியம் துவங்குமுன் சோணையன் நினைவுடன்
காசினை முடிந்து வைப்போம் !
வாரியே அருளினை வழங்குவாய் செயலெலாம்
சீருடன் நடக்கக் காண்போம் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

வம்பர்கள் சிலரது தொல்லையால் எளியவர்
வாழ்க்கையே சிரமம் ஆகும் !
சோகத்தைப் போக்கிட சோணையனை நினைத்திட
சோர்ந்திடும் பகைவர் கூட்டம் !
அநியாயம் செய்தெம்மை அரட்டிடும் மனிதர்கள்
அடங்கிட அருள வேண்டும் !
அன்பர்கள் போலிருந்து துன்பந்தரு கயவர்கள்
அழித்திடச் செய்ய வெண்டும் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

தொழிலது செழித்திட தேர்வினில் வென்றிட
துணைபுரிய வெண்டுமைய்யா !
திருமணம் நடந்திட குழந்தையும் பிறந்திட
அருள்புரிய வெண்டுமையா !
உறவுகள் போற்றிட உறைவிடம் பெற்றிட
வழிபுரிய வேண்டுமையா !
வாழ்வது சிறப்புற புகழுடன் திகழ்ந்திட
நலம்புரிய வெண்டுமையா!

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

மனநலம் உடல்நலம் மாந்தர்க்கு நலிவின்றி
மங்காது இருக்க வேண்டும் !
மருத்துவம் இன்றியே மனதினில் நினைக்கையில்
மருந்தாகி காக்க வேண்டும் !
வெளியினில் செல்கையில் வேளையில்
திளைக்கையில் ஆபத்தை நீக்கவேண்டும் !
வேதனை செய்கின்ற விலங்குகள் பூச்சிகள்
விலகியே ஓட வேண்டும் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

சோணயன் இருக்கிறான் சோகத்தை நீக்குவான்
சொத்தினை காப்பான் என்பர் !
நல்லவர் வருந்திடத் தீமைகள் செய்திடின்
நியாயத்தைக் கேட்பான் எனபர் !
எக்கணம் நிணைத்தாலும் எவ்விடம் அழைத்தாலும்
அக்கணம் ஓடி வருவாய் !
நித்தமும் கொண்டாடும் நின்குல மக்களை
நலியாது காக்க வருவாய் !

மாயாண்டி கருப்பையா ஆச்சியம்மன் தொட்டிச்சி மறக்காமல் காக்க வருக !
மனதாரக் கொண்டாடும் குலதெய்வம் சோணையா மேலான வாழ்வு தருக !

Leave a Comment